புதன், 14 நவம்பர், 2007

ஸ்டாலினின் 'தீண்டப்படாத இந்தியா'

படத்தின் முதல் காட்சியில் 'உயர்சாதி'க் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகக் காமிரா முன் குவிகிறார்கள். இயக்குநர் பின்னே நகர்ந்து தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் ஒருவரின் வீட்டுக்குள் செல்கிறார். குழந்தைகள் அதற்கு மேல் நகர முடியாமல் கோடிட்ட இடத்திற்குப் பின்னால் நின்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால், தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அசுத்தமடைந்துவிடுவோம் என்கிறார்கள் குழந்தைகள். சாதி மதிப்பீட்டு அமைப்பு நம் குழந்தைகளின் மனத்தில் ஆழமாக, நிரந்தரமாகப் பதிக்கப்பட்டுவிட்டது. 'எங்களுக்கு இந்திய அரசியல் சாசனத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை; மனு சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கும் மதிப்பீடுகளை மட்டுந்தான் நம்புகிறோம்' என்கிறார் உயர்சாதி நாட்டாமை ஒருவர்.
மனு சாஸ்திரத்தையும் அதை நம்பும் உயர்சாதியினரையும் ஸ்டாலின் தெளிவாகத் திட்டமிட்டுத் தாக்குகிறார், கேலி செய்கிறார். தீண்டாமையும் ஏற்றத் தாழ்வும் இப்போதும் பின்பற்றப்படும் பூமியில் அவர்களையும் சில நிஜ ஆதாரங்களையும் அருகருகே வைத்துக் காட்டுகிறார். ஒரு காட்சியில் அவர் சில பள்ளிக் குழந்தைகளைப் பின்தொடர்ந்து செல்கிறார். இங்கே தாழ்த்தப்பட்ட சாதிக் குழந்தைகள் கடைசிப் பெஞ்சுகளில் உட்காரவைக்கப்படுகிறார்கள். ஸ்டாலின் அதில் தலையிட முடிவெடுக்கிறார். எல்லாக் குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் ஒன்றுதிரட்டுகிறார்; இந்தக் குற்றத்தைச் செய்தது யார் என்று பள்ளி ஆசிரியரிடம் கேட்கிறார். ஆசிரியர் அதற்குத்தான் பொறுப்பல்ல என்கிறார். ஆனால், அவர் பொய் சொல்வதாகக் குழந்தைகள் கூறுகிறார்கள்.
இன்னொரு காட்சியில், கிராமத் துக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வரச் செல்லும் சில பதின்வயதுப் பெண்களை ஸ்டாலின் பின்தொடர்கிறார். இந்தத் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குக் கிணற்றிலிருந்து நீர் எடுக்க அனுமதி இல்லை. ஏனென்றால் அது நீரை 'அசுத்தமாக்கும்'. உயர்சாதிப் பெண்கள்தான் நீர் எடுக்க முடியும். தண்ணீர் வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் இவர்களிடம் கோரினால் தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டுவந்த பாத்திரங்களில் நீரை ஊற்றுவார்கள். தலைமுறை தலைமுறையாக, இந்த வகுப்பினருக்குத் தங்கள் சொந்தத் தேவைக்காகக் கூட நீர் எடுக்க அனுமதிக்கப்படாத நிலை இருக்கிறது.
படம் அற்புதமான ஒரு காட்சியில் முடிகிறது. இந்தக் காட்சியில் ஸ்டாலின் யாருமில்லாத ஒரு நேரத்தில் அந்தப் பெண்களைக் கிணற்றுக்கு அழைத்துச் செல்கிறார். அவர்களையே நீர் எடுக்க வற்புறுத்துகிறார். உயர்சாதிப் பெண்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் எழுவதால் அந்தப் பெண்களுக்கும் பார்வையாளருக்கும் அது பதற்றமான கணம். கடைசியில் அந்த மாபெரும் செயல் நிகழ்த்தப்படுகிறது. என் மதிப்பீட்டில் இது இந்து மத வரலாற்றில், நம் நாட்டின் சுதந்திரத்தில் பதிவுசெய்யப்பட்டவற்றிலேயே மிக முக்கியமான செயல்.
அந்தச் சிறுமி, வாழ்க்கையிலேயே அல்லது அவளது வம்சாவளியிலேயே முதல்முறையாக அந்தக் கிணற்றில் தானே நீர் எடுப்பதோடு அதை ஓர் உயர்சாதிச் சிறுவனுக்குக்கூடக் கொடுக்கிறாள். தயங்கும் அந்தச் சிறுவன், பிறகு துணிந்து அதைக் குடிக்கிறான். அந்தக் கிணற்றிலிருந்து அவளுக்கான நீரை அவளே எடுத்த அனுபவம் எப்படி இருந்தது என்று ஸ்டாலின் அவளிடம் கேட்கிறார். பதற்றமான சூழலில் அவளது திருப்தி உணர்வு, அவளுடைய நேர்மறையான கூற்று, அவள் புன்னகை, அவள் முகபாவம் ஆகியவை, திரைப்படத்திலும் நிஜ வாழ்க்கையிலும் நான் பார்த்ததிலேயே மிக அழகான காட்சிகள். ஸ்டாலினுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இந்தச் செயலுக்காக இந்த நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருது வழங்கப்பட வேண்டும்.
ஒரு நாடாகவும் தனிநபர்களாகவும் நாம் தீண்டப்படாமல், சாதியச் சேற்றில் ஆழமாகப் புதைந்திருப்பதை ஸ்டாலின் நிரூபித்தாலும், ஒரு பிரச்சினையைக் கருணையோடும் அன்போடும் பார்ப்பதற்கான ஒரு திறப்பை அவரது படம் உருவாக்கியிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் நிலவும் தீண்டாமைக்கான ஆதாரங்களைத் திரட்ட அவர் மேற்கொள்ளும் தகவல் அறியும் பயணம் நம்மை இந்தியா முழுவதும் அழைத்துச் செல்கிறது. அவர் எந்த அம்சத்தையும் விட்டுவைக்காமல் இந்து மதம், இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம் ஆகிய எல்லா மதங்களிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் அம்பலப்படுத்துகிறார். 'தாழ்ந்த சாதி'யில் பிறந்த ஒருவர் மதம் மாறினாலும் அவரது பிறந்த சாதி அடையாளம் அவர்மீது சுமத்தப்படுகிறது. அவரால் அதை உதற முடிவதில்லை. ஸ்டாலின் மிக உயர்ந்த எழுத்தறிவு உள்ள கேரளத்தில்கூட நுழைந்து சாதி, பிறப்பு அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு பரவியிருப்பதைக் காட்டுகிறார். ஸ்டாலின் தொடாத ஒரே மதம் பௌத்தந்தான் என்று பிறகு எனக்குத் தோன்றியது. தலித்துகள் பௌத்தத்தால் ஈர்க்கப்படுவதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். அம்பேத்கர் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் சான்றோர்களாலும் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக மனு சாஸ்திரம் தொடர்ந்து அதன் எல்லா மறைமுக வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தால் இந்து மதத்தின் அல்லது இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஆர்.வி. ரமணி தமிழில்: மீரா

கருத்துகள் இல்லை: